பாமக மாநாட்டில் பட்டியல் மக்களுக்கான தீர்மானம்.
வன்னியர் சங்கம் 1980-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட போது, அதற்கான நிகழ்வில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது தீர்மானம் பட்டிலின, பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக அதிகரிக்க வேண்டும் என்பது தான். ஆனாலும், இட ஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது சாத்தியம் ஆகவில்லை. சமூகநிலை மற்றும் கல்வியில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் பட்டியலினச் சகோதரர்கள். அவர்களின் மக்கள்தொகை மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இட ஒதுக்கீட்டை மட்டும் அதிகரிக்காமல் அதே நிலையில் வைத்திருப்பது நியாயம் அல்ல. அது பட்டியலின மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது.
பட்டியலின மக்கள் முன்னேறாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேற முடியாது. அதைக் கருத்தில் கொண்டு பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் அளவை இப்போதிருக்கும் 18% என்ற அளவிலிருந்து, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 20 விழுக்காடாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்த மாநாடு கோருகிறது.
0 கருத்துகள்